கோவை: கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு வந்த விமான பயணிகளிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்பிலான ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சாவைப் பறிமுதல் செய்த சுங்கவரித் துறையினர், இது தொடர்பாக 2 பேரைக் கைது செய்தனர். சிங்கப்பூரிலிருந்து கோவை வரும் விமானத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சுங்கவரி த்துறை அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டனர்.
2 பேர் கைது... இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு வந்த விமானத்தில் பயணிகள் இருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது, 6.713 கிலோ ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த பகத் முன் முஜீப், சுஹெய்ல் உபயதுல்லா ஆகியோரைக் கைது செய்தனர்.
‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ என்பது வெளிநாடுகளில் குறிப்பிட்ட வெப்பநிலையில், வீட்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் கஞ்சா செடியாகும். சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து இத்தகைய கஞ்சா கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இவற்றைத் தடுக்க சுங்கவரித் துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, சிங்கப்பூரில் இருந்து வந்த அதே விமானத்தில் பயணித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம் மற்றும் பாண்டிதுரை சுப்பையா ஆகியோரிடம் இருந்து ரு. 18.67 லட்சம் மதிப்பிலான கடத்தல் ட்ரோன்களை சுங்கவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.