மதுரை: மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன் அளித்த வாக்குமூலத்தில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா மற்றும் 3 கவுன்சிலர்கள் சொத்துவரி குறைப்பு விவகாரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் நேற்று முன்தினம் டிஐஜி அபினவ் குமாரிடம், விசாரணை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். இந்த வழக்கில் கண்ணன் அளித்துள்ள வாக்குமூலம் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் மதுரை மாநகராட்சி மேயர் இந்தி ராணியின் கணவர் பொன்.வசந்த்தை போலீஸார் சென்னையில் நேற்று கைது செய்தனர். மதுரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி காவலில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மனைவியான மேயர் இந்திராணியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது குறித்து முழுமையாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், மதுரையில் பணியாற்றி, தூத்துக்குடி மாநகராட்சிக்குப் பணி மாறுதலாகிச் சென்ற உதவி ஆணையர் (கணக்குகள்) சுரேஷ்குமாரை (59) போலீஸார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ்குமார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான சுரேஷ்குமார், மதுரை மண்டலம்-3-ல் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வரி நிர்ணயம் செய்ததில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இவரது பணிக்காலத்தில் வேறு எந்தெந்த கட்டிடங்களுக்குச் சொத்துவரி குறைப்பு நடந்தது, அதற்கு உடந்தையாக இருந்த கவுன்சிலர்கள், ஊழியர்கள் பட்டியலும் வெளியாக வாய்ப்புள்ளதால் கைது நடவடிக்கை மேலும் தொடரும் என கூறப்படுகிறது.
கைதான உதவி ஆணையர் சுரேஷ்குமார் 1989-ம் ஆண்டு முதல் மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்ததாகவும், மண்டலம்-3 அலுவலகத்தில் உதவி ஆணையராகவும், மைய அலுவலகத்தில் உதவி ஆணையராகவும் (கணக்குகள்), மாமன்றச் செயலராகவும் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.