சென்னை: கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளர் கெபிராஜை சென்னை மகளிர் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் கராத்தே மற்றும் ஜூடோ போன்ற தற்காப்புக் கலைக்கான பள்ளியை நடத்தி வந்த கெபிராஜ், தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மாணவி ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டு போலீஸில் புகார் அளித்தார். இதேபோல மேலும் பல மாணவிகள் அவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். அதன்பேரில் அண்ணாநகர் போலீஸார் கெபிராஜ் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பி்ன்னர் அவர் ஜாமீனி்ல் வெளியே வந்தார். இந்நிலையில், கெபிராஜூக்கு எதிரான வழக்கு சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா, குற்றம் சாட்டப்பட்ட கராத்தே மாஸ்டரான கெபிராஜை குற்றவாளி என அறிவித்து நேற்று தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று (ஆக.12) அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.