தீவிரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி 
க்ரைம்

வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: தீவிரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆந்திர போலீஸாரால் கைது

செய்திப்பிரிவு

சென்னை: வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தீவிரவாதி அபுபக்கர் சித்திக், அவரது கூட்டாளி முகமது அலியை ஆந்திர மாநில போலீஸார் சென்னையில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

நாகை மாவட்டம், நாகூரைச் சேர்ந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், கோவை தொடர் குண்டு வெடிப்பு, இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொலை உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். ‘ஆபரேஷன் அறம்’ என்னும் சிறப்பு நடவடிக்கை மூலம் அபுபக்கர் சித்திக்கை ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம், கடப்பா அருகே பதுங்கி இருந்த போது தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர்.

இதேபோல் மற்றொரு தீவிரவாதியான முகமது அலி என்ற ஷேக் மன்சூரையும் கைது செய்தனர். இவர்களை சென்னை அழைத்து வந்து, கடந்த மாதம் 1-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக போலீஸார் கொடுத்த தகவலின் பேரில் அபுபக்கர் சித்திக் பதுங்கி இருந்த வீட்டிலிருந்து வெடிமருந்துகளை ஆந்திர போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, இருவரையும் தமிழக போலீஸார் 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், அபுபக்கர் சித்திக் வெடிகுண்டுகள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்பதும், இதற்காக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்பதும் தெரியவந்தது. மேலும், பல்வேறு தேசவிரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

வேலூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கு அபுபக்கர் சித்திக்தான் குரு எனவும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

முன்னதாக ஆந்திராவில் அபுபக்கர் சித்திக் பதுங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தி சுமார் 30 கிலோ வெடி மருந்துகளை ஆந்திர போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை வந்த ஆந்திர போலீஸார், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபுபக்கர் சித்திக், அவரது நண்பர் முகமது அலி இருவரையும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்தனர். பின்னர், அவர்களை ஆந்திரா அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கு விரைவில் தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT