ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகேயுள்ள வேதாளை கடற்கரையில் மெரைன் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸாரை பார்த்தும் சரக்கு வாகனம் ஒன்றை கடற்கரையில் நிறுத்திவிட்டு, அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.
சரக்கு வாகனத்தை போலீஸார் சோதனையிட்டதில், 35 மூட்டைகளில் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தையும், சுக்குவையும் பறிமுதல் செய்த மெரைன் போலீஸார், அவற்றை சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், இலங்கைக்கு நாட்டுப் படகில் கடத்திச் செல்வதற்காக சரக்கு வாகனத்தில் சுக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சரக்கு வாகன உரிமையாளர் யார், தப்பி ஓடியவர்கள் யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.