தூத்துக்குடி: தூத்துக்குடியில் கோயில் பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தை சேர்ந்த மூக்காண்டி மகன் ரவி (38). இவர் தூத்துக்குடி 3-ம் மைல் மடத்தூர் சாலையில் உள்ள பேச்சியம்மன் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்தார்.
ஏரல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ரவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அப்பெண் தனது கணவர் மற்றும் மகனைப் பிரிந்து, 2 மகள்களுடன் ரவியுடன்வாழ்ந்து வந்தார்.
இவர்கள் ஆ.சண்முகபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.அந்தப் பெண்ணின் மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். தனது தந்தை தனியாக கஷ்டப்படு வதை பார்த்து மிகவும் வேதனை அடைந்துள்ளார். இதனால், தனது தாய் மற்றும் சகோதரிகளை தங்கள் குடும்பத்தில் இருந்து பிரித்துச் சென்ற ரவியை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோட்டையன்தோப்பு பகுதியில் உள்ள கடைக்கு ரவி சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அந்தப் பெண்ணின் 17 வயது மகன் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் ரவியை அரிவாளால் வெட்டினர்.
இதில் பலத்த காயமடைந்த ரவி, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீஸார் ரவியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக ஏஎஸ்பி மதன் மற்றும் தாள முத்துநகர் போலீஸார் விசாரணை நடத்தி, ரவியுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணின் 17 வயது மகன் மற்றும் அவரது உறவினரை கைது செய்தனர்.