திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த ஐடி பெண் ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக ஈரோட்டை சேர்ந்த கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை திருப்பூர் போலீஸார் இன்று கைது செய்தனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை பிரண்ட்ஸ் கார்டனை சேர்ந்த குப்புசாமி - சுகந்தி தம்பதியின் மகள் பிரீத்தி (26). ஐடி ஊழியர். தந்தை குப்புசாமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில், தாயுடன் பிரீத்தி வசித்து வந்தார். இந்நிலையில், பிரீத்திக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சதீஷ்வர் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி திருமணம் நடந்தது. வரதட்சணையாக 80 பவுன் நகை, ரூ.20 லட்சம், கார் ஆகியவற்றை பிரீத்தியின் தாய் சுகந்தி கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலமாக திருப்பூரில் உள்ள தாய் வீட்டில் பிரீத்தி தங்கியிருந்தார். கடந்த 5-ம் தேதி தாய் வீட்டில் இல்லாத நிலையில், வீட்டில் தூக்கிட்டு பிரீத்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பிரீத்தியின் தாய் சுகந்தி மற்றும் குடும்பத்தினர் கூறும்போது, “பிரீத்தியின் பூர்வீக சொத்து வகையில் ரூ.50 லட்சம் வருவதை அறிந்த சதீஷ்வர் அதைக் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சல் அடைந்த பிரீத்தி தற்கொலை செய்து கொண்டார். பிரீத்தி தற்கொலை செய்த நிலையில் குடும்பத்தினர் யாரும் வரவில்லை. வரதட்சணை கொடுமையால் இறந்துவிட்டார்” என்றனர்.
இதையடுத்து சுகந்தி அளித்த புகாரின் பேரில் நல்லூர் போலீஸார் தற்கொலை வழக்கு பதிந்தனர். திருமணமாகி ஓராண்டு கூட நிறைவடையாத தால், கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக விசாரணை நடந்து வரும் நிலையில், இளம்பெண் பிரீத்தியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், அவரது கணவர் சதீஷ்வர், மாமனார் விஜயகுமார் (56), மாமியார் உமா (52) ஆகியோரை நல்லூர் போலீஸார் இன்று வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரண்டிருந்த பிரீத்தியின் தாய் மற்றும் குடும்பத்தினர் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிரீத்தியின் சடலத்தை பெற்று, மின் மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக அவரது தாய் சுகந்தி கூறும்போது, “பணம், பணம் என்று நச்சரித்து எனது மகளை கொன்றுவிட்டனர். இதில் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்று வரதட்சணை துயரம், இனி யாருக்கும் நடக்கக்கூடாது. திருப்பூர் வருவாய்த் துறை அதிகாரிகளும், போலீஸாரும் உரிய முறையில் விசாரித்து, எனது மகளின் இறப்புக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்” என்றார்.