இடது: படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் | வலது: போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மணிகண்டன். 
க்ரைம்

உடுமலை சிறப்பு எஸ்ஐ கொலையில் தொடர்புடைய நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

எம்.நாகராஜன்

உடுமலை: உடுமலையில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்கள்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள வாஞ்சிநாதன் நகரில் வசித்து வந்தவர் சண்முகவேல் (57). இவர், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். குடிமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு தங்கி வேலை பார்த்து வந்த மூர்த்தி (66) என்பவருக்கும் அவரது மகன்களுக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

இதில் தொடர்புடைய மூர்த்தி, அவரது மகன்கள் மணிகண்டன், தங்கப்பாண்டி ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இதற்கிடையே, மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டி ஆகிய இருவரும் திருப்பூர் போலீஸில் சரணடைந்தனர். புதன்கிழமை இரவு தனிப்படை போலீஸார் மணிகண்டனை கைது செய்தனர்.

மூவரிடமும் விடிய விடிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தை காண்பிப்பதற்காக மணிகண்டனை அழைத்துக் கொண்டு போலீஸார் சிக்கனூத்து அருகே உள்ள உப்பாறு ஓடையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மறைவான இடத்தில் இருந்த அறிவாளை எடுத்த மணிகண்டன், உடன் சென்ற குடிமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமாரை தாக்கினார். இதில் வலது கையில் சரவணகுமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து குடிமங்கலம் காவல் ஆய்வாளர் திருஞானசம்பந்தம் தனது துப்பாக்கியை எடுத்து மணிகண்டனை சுட்டுள்ளார். பின் தலையில் குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் சுருண்டு விழுந்தார்.

பின்னர் காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் மணிகண்டனை மீட்டு போலீஸார் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மணிகண்டன் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

வலது கையில் காயம் ஏற்பட்ட சரவணகுமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக குடிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT