க்ரைம்

மதுரையில் அதிகாரிகள் போல் நடித்து 1.5 கிலோ தங்கம் வழிப்பறி - வடமாநில கொள்ளையர் கைவரிசை

செய்திப்பிரிவு

காரைக்குடியில் மதுரையைச் சேர்ந்த நகைக்கடை ஊழியரிடம் சுங்க அதிகாரிகள் போல் நடித்து 1.5 கிலோ தங்கத்தை வடமாநில கொள்ளையர் வழிப்பறி செய்து தப்பினர்.

மதுரையைச் சேர்ந்தவர் விஜய ராஜா (40). இவர் மதுரையிலுள்ள ஒரு நகைக் கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் நகைக்கடை வியாபாரிகளிடம் வாங்கிய 1.5 கிலோ தங்கக்கட்டியின் தரத்தைக் கூட்டுவதற்காக மதுரையிலிருந்து காரைக்குடிக்கு தனியார் பேருந்தில் வந்தார். பழைய பேருந்து நிலையத்தில் இறங்கிய இவர், தனியார் திரையரங்கு அருகே நடந்து சென்றார்.

அப்போது காரில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து, தாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள், விசாரிக்க வேண்டும் என்று கூறி காரில் ஏற்றினர். பின்னர் அவரிடம் இருந்த 1.5 கிலோ தங்கக் கட்டியைப் பறித்துக் கொண்டு, கானாடுகாத்தான் அருகே இறக்கிவிட்டுச் சென்றனர். விஜயராஜா அங்கிருந்து ஆட்டோவில் ஏறி காரைக்குடி வடக்கு காவல் நிலையம் வந்து புகார் கொடுத்தார்.

தொடர்ந்து சம்பவ இடத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், டிஎஸ்பி கவுதம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

மேலும் அங்குள்ள கடைகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். முதல் கட்ட விசாரணையில் வழிப் பறி செய்தவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT