காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள், பட்டுப்புடவை உள்ளிட்டவற்றை திருடிச் சென்றவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வரும் மத்திய ரிசர்வ் காவல் படையின் பெண் காவலர் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலாவதி. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் காவல் படை காவலராக பணியாற்றி வருகிறார். அங்கிருந்து கண்ணீருடன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘காட்பாடி அடுத்த நாராயண புரத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில் பூட்டை உடைத்து நகை, பட்டுப்புடவையை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து, பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜூன் 28-ம் தேதிதான் வழக்குப்பதிவு செய்தனர். எனது திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகையை திருடிச்சென்றுவிட்டனர். காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ காட்சியை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட கலாவதியின் வீட்டில் காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப் பாளர் பழனி விசாரணை நடத்தினார். இதுகுறித்து, காவல்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த ஜூன் 24-ம் தேதி மாலை கலாவதியின் தந்தை குமாரசாமி (67) தனது மனைவியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார். மாலை 6 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைந்திருப்பதை பார்த்துள்ளனர். பின்னர்,உள்ளே சென்று பார்த்தபோது சாவியை பயன்படுத்தி பீரோவை திறந்து அதிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், பட்டுப் புடவைகள் திருடிச் சென்றுள்ளனர்.
பீரோவில் இருந்து வீசியதால் கலைந்திருந்த பொருட்களை குமாரசாமியும், அவரது மனைவியும் சரி செய்துள்ளனர். இவர்களது மகன் தசரதன், வேலூர் சிஎம்சியில் பணிபுரிந்து வருகிறார். அவர் வீடு திரும்பியதும் பொன்னை காவல் நிலையத்தில் இரவு 10 மணிக்கு புகார் கொடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் பாரா பணியில் இருந்த காவலர் புகாரை பெற்றுள்ளார். முதல்வர் வேலூர் வருகையையொட்டி ஜூன் 24, 25-ம் தேதிகளில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் அனைவரும் இருந்ததால் மறுநாள் (ஜூன் 25-ம் தேதி) உதவி ஆய்வாளர் குமார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கலாவதி வீட்டில் ஆய்வு செய்து கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். அன்றைய தினமே 31/2025 எண் கொண்ட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
குமாரசாமி பெயரில் அளித்துள்ள புகாரில் கலாவதியின் முதல் கணவரான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தோஷ் என்பவர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர். அவர், சென்னையில் எம்எல்ஏ விடுதியில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். அவரை அழைத்து விசாரித்ததில் அவர்கள் குறிப்பிடும் தேதியில் சென்னையில் பணியில் இருந்ததாக அவர் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துள்ளார். இந்த வழக்கில் சந்தோஷ் உள்ளிட்ட 12 சந்தேக நபர்களின் கைபேசி டவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சந்தோஷின் முதல் மனைவி உயிரிழந்ததால் இரண்டாவதாக கலாவதியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அவர் 3 மாதம் கர்ப்பிணியாக இருந்தபோது மத்திய ரிசர்வ் காவல் படையில் பணி வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது விண்ணப்பத்தில் திருமணமாகவில்லை என கலாவதி குறிப்பிட்டிருந்ததால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படும் என்பதால் கணவரை விவாகரத்து செய்துவிட்டார் என்று கூறியுள்ளனர். தற்போது, இந்த திருட்டு தொடர்பாக முதல் கணவர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளதால் முறையாக விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.