மரக்கார் பிரியாணி உரிமையாளரான ராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரன். 
க்ரைம்

தமிழகத்தில் முதல் முறை: பொருளாதார குற்ற வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர்: பொருளாதார குற்றப் பிரிவு வழக்கில் கைதான ராஜபாளையத்தைச் சேர்ந்தவர், தமிழகத்தில் முதன்முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகத்தில் பெருகி வரும் நிதி நிறுவன மோசடி உட்பட பல்வேறு மோசடிகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஜூலை 8-ம் தேதி வெளியிட்ட அரசாணையில் பொருளாதாரக் குற்றவாளிகள், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர். போதைப்பொருள் குற்றவாளிகள். பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகள் ஆகியோர் தமிழ்நாடு வன் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (1982-ன் சட்டம் 14, குண்டர் தடுப்புச் சட்டம்)- கீழ் கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்ட மரக்கார் பிரியாணி, ட்ரோல் டோர் இண்டியா பிரைவேட் லிமிடெட், கதேல் கபே ஆகிய நிறுவனங்கள் பங்கீட்டு அடிப்படையில் உரிமம் வழங்குவதாகவும் அதன் பேரில் மேற்படி நிறுவனங்களே நிர்வகித்து வருமானத்தில் 10 சதவீதம் மற்றும் மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் லாபம் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தைகளைப் பொதுமக்களுக்கு அளித்தன.

அதன்படி மரக்கார் பிரியாணி 21 இடங்களில் மாதிரிக் கடைகளைத் திறந்து தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 239 பேரிடம் தலா ரூ 5.18 லட்சம் வீதம் சுமார் ரூ.12 கோடிக்கும் மேல் முதலீடாகப் பெற்று முறைகேடு செய்தது. இது குறித்து விருதுநகர் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து மரக்கார் பிரியாணி உரிமையாளரான ராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரன் (45) என்பவரை கடந்த மாதம் 7-ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட கங்காதரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பொருளாதார தென் மண்டல காவல் கண்காணிப்பாளர் சரவணக்குமார் பரிந்துரையின்பேரில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இன்று உத்தரவிட்டார். தமிழகத்தில் பொருளாதாரக் குற்றத்தில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

SCROLL FOR NEXT