திருச்சி: திருச்சி முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் முக்கொம் பில் 4.10.23 அன்று காதலருடன் தனியாக இருந்த 17 வயது சிறுமிக்கு ஜீயபுரம் காவல் உதவி ஆய்வாளராக இருந்த சசிகுமார், நவல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து காவலர் சங்கர ராஜபாண்டியன், ஜீயபுரம் போக்குவரத்து பிரிவு காவலர் சித்தார்த்தன் ஆகியோர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸார், உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். துறை ரீதியாக நடைபெற்று வந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் சித்தார்த்தன், பிரசாத் ஆகியோரை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு காவலரான சங்கர ராஜபாண்டியன் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.