க்ரைம்

ஆம்பூரில் கத்தி முனையில் 40 பவுன் நகைகள் திருட்டு - ‘பர்தா’ நபர் குறித்து போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

ஆம்பூரில் பேன்சி ஸ்டோர் உரிமையாளர் வீட்டுக்குள் பர்தா அணிந்து நுழைந்த மர்ம நபர், வீட்டில் இருந்த பெண்களிடம் கத்தி முனையில் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சத்தை திருட்டிச் சென்றார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முகமதுபுறா மசூதி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் முபாரக்பாட்சா. இவர், ஆம்பூர் நேதாஜி சாலையில் கடந்த 20 ஆண்டுகளாக பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை முபாரக் பாட்சா வழக்கம் போல வீட்டில் இருந்து கடைக்கு சென்றார்.

அவரது மனைவி சுல்தானா மற்றும் மகள் மிஸ்கான் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர். இந்நிலையில் நேற்று பகல் 12 மணயளவில் பர்தா அணிந்த மர்ம நபர் ஒருவர் முபாரக் பாட்சா வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே காலிங் பெல் அடித்தவுடன் வீட்டில் இருந்த சுல்தானா வெளியே வந்து பார்த்த போது, திருமண அழைப்பிதழ் கொண்டு வந்திருப்பதாக அந்த நபர் கூறியுள்ளார்.

இதையடுத்து, சுல்தானா அந்த நபரை உள்ளே அனுமதித்தார். உள்ளே நுழைந்த அடுத்த விநாடி பர்தா அணிந்த மர்ம நபர் சுல்தானாவிடம் கத்தியை காட்டி மிரட்டினார். இதைக்கண்டு சுல்தானா மற்றும் அவரது மகள் மிஸ்கான் ஆகியோர் அதிர்ச்சியடைந்து கூச்சல் எழுப்ப முயன்ற போது அந்த நபர் கூச்சலிட்டால் கத்தியால் குத்திக்கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

வீட்டில் உள்ள பீரோ இருக்கும் அறை எது எனக்கேட்டு அங்கு சென்று தாய் மற்றும் மகள் இருவரையும் மிரட்டி சாவியை கொண்டு பீரோவை திறக்கச்சொல்லி கத்தி முனையில் பீரோவில் மகள் திருமணத்துக்காக வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ. 5 லட்சத்தை ஆகியவற்றை திருடிக் கொண்டு, இதை வெளியே சொன்னால் குடும்பத் தோடு கொலை செய்து விடுவேன் என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பகல் 12 மணியளவில் பர்தா அணிந்த மர்ம நபர் முபாரக்பாட்சா வீட்டுக்குள் நுழைந்து அங்கு அரை மணி நேரத்துக்கு பிறகு பகல் 12.30 மணியளவில் அவர் வீட்டில் இருந்து வெளியே செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து சுல்தானா தனது கணவரிடம் தெரிவித்து கதறி அழுதார். உடனே, வீட்டுக்கு சென்ற முபாரக்பாட்சா நடந்தவற்றை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, இது தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்துக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார், காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் நேரில் வந்து முபாரக்பாட்சா குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி, முபாரக் பாட்சா வீட்டில் பதிவான கை ரேகைகளை ஆய்வு செய்து இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT