ஊட்டி எல்க்ஹில் குமரன் நகரை சேர்ந்த விஜய் (35) என்பவர், வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார்.
சிறுமி சத்தமிட்டதால், யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டிவிட்டு, விஜய் தப்பினார். சிறுமி சோர்வாக இருந்ததை கண்ட அவரது தாய் விசாரித்தார். சிறுமி நடந்தவற்றை தாயிடம் கூறினார். இதுதொடர்பாக ஊட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி பெற்றோர் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் சரஸ்வதி புகாரை பதிவு செய்து, விஜயை கைது செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், விஜய்க்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.1 லட்சம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.