சென்னை: கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக கவுன்சிலர் தனசேகரனின் பேரன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அயனாவரம், முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் நிதின்சாய் (21). இவர் கடந்த திங்கள் இரவு 10.30 மணிக்கு, தனது நண்பரான கல்லூரி மாணவர் அபிஷேக் (20) உடன் திருமங்கலம் பள்ளி சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் அபிஷேக் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், பின்னால் அமர்ந்திருந்த நிதின்சாய் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் இறந்தார். அபிஷேக் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில், நிதின்சாயின் நண்பரான வெங்கடேசன் என்பவர் பிளஸ் 2 மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார்.
ஆனால், இதை விரும்பாத அந்த பெண் இதுபற்றி தனது ஆண் நண்பர் பிரணவ் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, வெங்கடேசனை போனில் பிரணவ் திட்டியுள்ளார். அத்துடன், பிரணவ் தனது கூட்டாளிகளுடன் சொகுசு காரில் சென்று, மாணவி காதல் விவகாரம் தொடர்பாக நிதின்சாய், வெங்கடேசுடன் பேசினர்.
அப்போது ஏற்பட்ட மோதலில், காரில் வந்தவர்கள் வெங்கடேசன் மீது திடீரென காரை ஏற்றியதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வெங்கடேசன் தரப்பினர் காரை சேதப்படுத்தி உள்ளனர். பின்னர், நிதின்சாயும் அபிஷேக்கும் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு அதிவேகமாக வந்த அதே சொகுசு கார் அபிஷேக், நிதின்சாய் சென்ற பைக் மீது மோதியது. இதில் நிதின்சாய் அதே இடத்தில் இறந்தார். மாணவரை இடித்து தள்ளி கொலை செய்ய பயன்படுத்திய காரில், திமுக கவுன்சிலரும் மாநகராட்சி கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவருமான கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துரு, சென்னை காவல் ஆய்வாளர் ஒருவரது உறவினரும், வழக்கறிஞரின் மகனுமான ஆரோன் என்பவரும் இருந்துள்ளனர்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவர்களான சந்துரு, ஆரோன், யாஷ்வின் ஆகிய 3 பேரும் திருமங்கலம் போலீஸாரிடம் சரண் அடைந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். கைதான சந்துரு கூறுகையில், ‘மாணவி விவகாரம் தொடர்பாக பேச பிரணவ் என்னை அழைத்ததின் பேரி்ல், நானும், ஆரோனும் காரில் விரைந்து சென்றோம்.
அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அவர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களது வாகனம் மீது இடித்தோம். எதிர்பாராதவிதமாக ஒருவர் இறந்து விட்டார். கொலை செய்யும் நோக்கத்துடன் நாங்கள் இடிக்கவில்லை’’ என சந்துரு வாக்குமூலமாக கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.