கரூர்: கரூர் மாவட்டத்தில் புகார்தாரரின் வீடு தேடி சென்று எப்ஐஆர் வழங்கும் நடைமுறையை எஸ்.பி. ஜோஷ் தங்கையா அமல்படுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் - ஒழுங்கு, 3 அனைத்து மகளிர், போக்குவரத்து, சைபர் க்ரைம் உள்ளிட்ட காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பதிவு செய்யப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) புகார்தாரர்கள் பெறுவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க, அவர்களின் வீடு தேடி சென்று, எப்ஐஆர் அறிக்கையை வழங்க எஸ்.பி. ஜோஷ் தங்கையா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, காவல் நிலையங்களில் இருந்து போலீஸார் புகார்தாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக தேடிச் சென்று, முதல் தகவல் அறிக்கை வழங்கும் நடைமுறை ஜூலை 21-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையால் இதுவரை 76 முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை பொதுமக்களுக்கு காவல் துறையின் மீது நம்பிக்கை மற்றும் நெருக்கமான தொடர்புடைய ஏற்படுத்தியுள்ளதுடன், மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. கரூர் மாவட்ட காவல் துறையின் இத்தகைய மக்கள் நேய நடவடிக்கைகள் முன் மாதிரியாக இருப்பதுடன், பொதுமக்களின் நம்பிக்கையை வெகுவாக பெற்றுள்ளதாகவும் புகார்தாரர்கள் தெரிவித்தனர்.