சென்னை: குரோம்பேட்டை, ஆதம் நகரைச் சேர்ந்தவர் பரந்தாமன் (43). இவர் நேற்று முன்தினம் பிற்பகல் வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள மதுபானக் கடை அருகே மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு கோடம்பாக்கம் வசந்தராஜ் (39), சாந்தகுமார் (37), சாலிகிராமம் விக்னேஸ்வரன் (28) ஆகிய 3 பேர் வந்தனர்.
வந்தவர்கள் பரந்தாமன் வைத்திருந்த மதுபானத்தை கேட்காமல் எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனால், பரந்தாமனுக்கும், 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மூவரும் பரந்தாமனை கையாலும், ஸ்பேனராலும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.
தகவல் அறிந்து வடபழனி போலீஸார் சம்பவ இடம் விரைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பரந்தாமனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி அன்றைய தினமே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த வசந்தராஜ், சாந்தகுமார், விக்னேஷ்வரன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.