பூவை ஜெகன்மூர்த்தி | கோப்புப் படம் 
க்ரைம்

காஞ்சிபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை

இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: சிறுவன் கடத்தல் வழங்கில் குற்றம்சாட்டப்பட்ட பூவை ஜெகன்மூர்த்தியிடம் காஞ்சிபுரம் சிபிசிஐடி காவல் நிலையத்தில் போலீஸார் இன்று (ஜூலை 28) விசாரணை நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்துகொணடார். இதற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக தனுஷின் 17 வயது தம்பி, கடந்த ஜூன் 6-ம் தேதி நள்ளிரவில் கடத்தப்பட்டார். இந்தக் கடத்தல் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி, போலீஸ் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, ஏடிஜிபியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராமன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம், கைது உத்தரவை ரத்து செய்தும், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை வேறு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டது.

இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை கடந்த ஜூன் 27-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, பூவை ஜெகன்மூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையில், ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டதை அடுத்து, சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே சிறையில் உள்ள விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா உள்ளிட்ட 5 பேர், ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்த நிலையில். பூஜை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு அழைத்தைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் சிபிசிஐடி காவல் நிலையத்தில் பூவை ஜெகன்மூர்த்தி இன்று ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை பூஜை ஜெகன்மூர்த்தி மறுத்தார். சில மணி நேர விசாரணைக்குப் பின் ஜெகன்மூர்த்தி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

SCROLL FOR NEXT