கோப்புப் படம் 
க்ரைம்

ஊத்துக்கோட்டை அருகே விவசாயியை எரித்து கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே விவசாயியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கரமனூர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன்(45). விவசாயியான இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த தசரதன், குமார், குமரேசன் ஆகியோருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி ஆனந்தன், தன் வீட்டிலிருந்து தன் மோட்டார் சைக்கிளில் விவசாய நிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, தசரதன், குமார், குமரேசன் ஆகிய 3 பேரும், ஆனந்தனை வழிமறித்து அவரது மோட்டார் சைக்கிளிலேயே கடத்தி சென்று, செங்கரை அருகே 3 பேரும் தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து, தசரதன் உள்ளிட்ட 3 பேரும், ஆனந்தனை அவரது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கில் இருந்த பெட்ரோலை பிடித்து ஊற்றி எரித்து கொன்று, பிறகு ஆரணி ஆற்றில் புதைத்தனர். இந்தக் கொலை சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு, தசரன் உள்ளிட்ட 3 பேரும் கிராம நிர்வாக அலுவலர் முன்பு சரண் அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தக் கொலை வழக்கு விசாரணை, திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் வாதிட்டார். முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், தசரதன், குமார், குமரேசன் ஆகிய 3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் இன்று தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில், தசரதன், குமார், குமரேசன் ஆகிய 3 பேருக்கும் தலா ஆயுள் தண்டனையும் மற்றும் தலா ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT