மணப்பாறை பாஜக நிர்வாகி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பாஜக நகரத் தலைவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை காந்தி நகரைச் சேர்ந்தவர் ஹரிபாண்டியன் (45). மணப்பாறை நகர பாஜக துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். மணப்பாறை பேருந்து நிலையம் அருகே கம்யூட்டர், ஜெராக்ஸ், பிரின்டர் ஆகியவை பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது கடையில் பாண்டியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி ஞான சவுந்தரி மணப்பாறை போலீஸில் அளித்த புகாரில், எனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது. பாஜக நகரத் தலைவர் கோபால கிருஷ்ணன் (எ) கோல்டு கோபால் (45), அவரது நண்பர்களான கண்ணுடையான்பட்டியை சேர்ந்த சண்முக சுந்தரம் (41), செவலூரை சேர்ந்த விஜயராகவன் (44) ஆகியோர் ஒரு சில ஆவணங்களை கேட்டு எனது கணவரை தொடர்ந்து மிரட்டி வந்தனர். எனவே இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக மணப்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோபால கிருஷ்ணன், சண்முக சுந்தரம், விஜயராகவன் ஆகியோரை கைது செய்தனர். பாண்டியனின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.