க்ரைம்

கோவை: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான முதியவர் உட்பட மூவர் குண்டாஸில் அடைப்பு

செய்திப்பிரிவு

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் குஷால் பிஷ்வாஸ், அலிகாதர் ஷேக், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஷிவ்குமார். இவர்கள் கோவையில் வெவ்வேறு இடங்களில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் விடுமுறையையொட்டி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு, கடந்த மாதம் இறுதியில் கோவைக்கு வந்தனர். கோவை ரயில் நிலையத்தில் இருந்து தாங்கள் பணிபுரியும் இடத்துக்கு செல்வதற்காக ஆட்டோ பிடித்தனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர்களான தென்னம் பாளையத்தைச் சேர்ந்த நவுபல் பாஷா (29), செல்வபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (33) ஆகியோர் வடமாநில இளைஞர்களை தங்களது ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.

அவர்கள் கூறிய இடத்துக்கு அழைத்துச் செல்லாமல், ஆவாரம்பாளையம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநர்கள் அவர்களை தாக்கி பணத்தை பறித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதன் இறுதியில், நவுபல் பாஷா, செந்தில் குமார் ஆகியோரை கடந்த மாதம் இறுதியில் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், குற்றச் செயலில் ஈடுபட்ட இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து நவுபல் பாஷா, செந்தில்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் கோவை மத்திய சிறையில் குண்டர்கள் தடுப்புப் பிரிவில் அடைக்கப் பட்டனர். அதேபோல், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில், மத்தியப் பகுதி அனைத்து மகளிர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட வடகோவையைச் சேர்ந்த கருப்பன்(80) என்ற முதியவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். தொடர்ந்து கருப்பனும் நேற்று முன்தினம் கோவை மத்திய சிறையில் குண்டர்கள் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT