சென்னை: சென்னை திருவிக நகரில் வசித்து வருபவர் வினோத் (31). உடற்பயிற்சிக் கூடத்தில் பயன்படுத்தும் உபகரணங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 22-ம் தேதி இரவு, திருவிக நகர், ராம் நகர், 70 அடி சாலையில் அவரது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த ஓர் இருசக்கர வாகனம் வினோத் காரின் பின்புறம் மோதியது.
அதிர்ச்சி அடைந்த வினோத் காரை நிறுத்தி, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் இது தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அழைத்ததின்பேரில், மேலும் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் என மொத்தம் 4 பேரும் சேர்ந்து வினோத்தை சரமாரியாகத் தாக்கினர். பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தாக்குதலில் காயம் அடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது தொடர்பாக திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியது கொசப்பேட்டை சதிஷ்குமார் (18), சாம்குமார் (22), ஓட்டேரி விக்னேஷ் என்ற விக்கி (19), பெரம்பூர் முகம்மதுதோஷிப் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.