தருமபுரியை அடுத்த உழவன் கொட்டாய் அருகே சாலையோர வீட்டின்மீது மோதி விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து. 
க்ரைம்

வீட்டின் மீது அரசு பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு - தருமபுரியில் நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரியை அடுத்த உழவன் கொட்டாய் பகுதியில் சாலையோர வீட்டின்மீது அரசு நகரப் பேருந்து மோதிய விபத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தார். தருமபுரி-உழவன் கொட்டாய் இடையே இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து நேற்று காலை 9 மணியளவில் உழவன் கொட்டாய் கிராமத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தருமபுரி நோக்கிச் சென்றது.

பேருந்தை தேவராஜ் (48) ஓட்டிச் சென்றார். புறப்பட்ட சற்று நேரத்தில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ராமு என்பவரின் வீட்டின்மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் தேவராஜ் காயமடைந்தார்.

மேலும், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் என்பவரின் மகள் ஆத்விகா (4) பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி ஆத்விகா உயிரிழந்தார்.

இதனால் சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உழவன் கொட்டாய் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். உழவன்கொட்டாய் பகுதிக்கு நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தருமபுரி வட்டாட்சியர் சவுகத் அலி, பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, அதியமான் கோட்டை போலீஸார் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை அரசு கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.

இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தருமபுரியை அடுத்த உழவன் கொட்டாய் அருகே சாலையோர வீட்டின்மீது மோதி விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து. (அடுத்த படம்) பேருந்து விபத்தை கண்டித்து உழவன் கொட்டாய் கிராமத்தில் நடந்த மறியல் போராட்டம்.

SCROLL FOR NEXT