புதுச்சேரி எல்லப் பிள்ளைசாவடி சித்தானந்தா நகரைச் சேர்ந்தவர் துரை (48). இந்து முன்னணி நகர செயற்குழு உறுப்பினர். இவர். புதுச்சேரி கனகன் ஏரி அருகே மணல், ஜல்லி விற்பனை செய்யும் நிலையம் நடத்தி வந்தார். இவருக்கு, ரேகா என்ற மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
துரை தனது வீட்டில் நடந்து வரும் கட்டுமான பணிக்காக, நேற்று மாலை தனது விற்பனை நிலையத்தில் இருந்த மணலை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது வந்த 4 பேர் கொண்ட கும்பல், விற்பனை நிலையத்தின் நுழைவு வாயிலை மூடிவிட்டு, அங்கிருந்த துரையை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த துரை சம்பவ இடத்திலேயே இறந்தார். துரை இறந்ததை உறுதி செய்த அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது குறித்து தகவல் அறிந்த எஸ்.பி வம்சிதர ரெட்டி, இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமரன், கணேஷ், சப் -இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தடவியல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அளிக்கப்பட்டுள்ள தகவல் விவரம் வருமாறு: கொலை செய்யப்பட்ட துரையின் மனைவியான ரேகாவின் தந்தை திருவேங்கடம் - தாய் செல்வி. இதில், செல்வி இறந்த பிறகு, இரண்டாவதாக சித்ரா என்பவரை திருவேங்கடம் திருமணம் செய்துள்ளார். பின்னர், தனது சொத்துகளை முதல் மனைவியின் மகளான ரேகாவுக்கும், 2-வது மனைவிக்கும் சரிபாதியாக எழுதி கொடுத்துள்ளார்.
2-வது மனைவிக்கு 4 குழந்தைகள் என்பதால், அவர்கள் ரேகாவுக்கு எழுதி கொடுத்த சொத்தை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ரேகா குடும்பத்தினருக்கும், சித்ரா குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே, ரேகா குடும்பத்தினர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில், வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனால் சித்ராவின் குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்தக் கட்டுமான பணிக்காக துரை மணல் எடுத்துச் செல்ல வந்தபோது, அவரை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது என்று போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.