சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யாமல் இருக்க நடிகர், நடிகைகளிடம் சுமார் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காவல் ஆய்வாளர், 2 எஸ்.ஐ.க்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பணம் கொடுத்த சினிமா பிரபலங்கள் யார் என விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மே 22-ம் தேதி நடந்த மோதல் தொடர்பாக கைதான அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான சேலம் சங்ககிரி பிரதீப்குமார் என்ற பிரடோ, கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போதைப் பொருள் வழக்கிலும் பிரசாத் கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய புகாரில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரும் போதைப்பொருள் விற்றதாக கெவின் என்பவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார், சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் தனிப்படை போலீஸார் ஒருங்கிணைந்து துப்பு துலக்கி கைது நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இதில் பிரபல நடிகர், நடிகை மற்றும் சினிமா பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்படி, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு விசாரணைக்கு ஆஜரான பலரிடம் கைது செய்யாமல் இருக்க லஞ்சம் தர வேண்டும், இல்லை என்றால் சிறையில் அடைத்து அதை செய்தியாக வெளியிடுவோம் என மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு பயந்த பல சினிமா பிரபலங்கள் லட்சக் கணக்கில் பணத்தை கொடுத்து, தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரியதாக தெரிகிறது. இவ்வாறு ரூ.50 லட்சத்துக்கும் மேல் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த காவல் ஆணையர் அருண், இதை விசாரித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், லஞ்சம் கைமாறியது உறுதியானது. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான தனிப்படையைச் சேர்ந்த திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சுதாகர், உதவி ஆய்வாளர்களான ராமகிருஷ்ணன் (நுங்கம்பாக்கம்), அருண்மணி (ஆயிரம் விளக்கு) ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் சில போலீஸாரும் சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லஞ்சம் கொடுத்தவர்களின் விவரம் குறித்தும் விசாரிக்கப்படுகிறது.