கரூர்: குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை நேற்று கணவரே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பட்டவர்த்தியைச் சேர்ந்தவர் ராமசாமி. ஓய்வுபெற்ற சிஆர்பிஎப் டிஎஸ்பி. இவரது மகன் விஷ்ரூத்(30). கார் ஓட்டுநர். இவரது மனைவி ஸ்ருதி(27). தனியார் பள்ளி ஆசிரியை. இரு குழந்தைகள் உள்ளனர். விஷ்ரூத்தின் தந்தை சென்னையில் பணியாற்றிய போது ஸ்ருதியை விஷ்ரூத் காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
தந்தையின் பணி ஓய்வுக்கு பிறகு அனைவரும் சொந்த ஊரான பட்ட வர்த்தியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தம்பதி இடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட குடும்ப தகாராறில், விஷ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து, நேற்று அதிகாலை ஸ்ருதியை பார்க்க மருத்துவமனைக்கு வந்த விஷ்ரூத் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென ஸ்ருதியின் கழுத்து உள்ளிட்ட 3 இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில், ஸ்ருதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ருதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, தலைமறைவான விஷ்ரூத்தை தேடி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கணவர் குத்திக் கொன்ற சம்பவம் குளித்தலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.