பொன்னேரி: அடுக்குமாடி குடியிருப்பு போடப்பட்ட ஒப்பந்தப்படி முழு தொகையை திருப்பி தராமல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, திமுகவை சேர்ந்த, சென்னை மாநகராட்சி மணலி மண்டல குழு தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ்நகரை சேர்ந்தவர் ரமேஷ்(44). இவர் தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புக்காக வாங்கப்பட்ட கடன்களை முழுமையாக செலுத்த முடியாமல் அவதியுற்று வந்ததாக தெரிகிறது. இதனால், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை விற்க முடிவு செய்தார்.
அதன்படி, கடந்த ஆண்டு திமுகவைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி மணலி மண்டல குழு தலைவரான ஏ.வி.ஆறுமுகத்தின் அண்ணன் முருகனிடம் அடுக்குமாடி குடியிருப்பை விற்பனை செய்ய முடிவு செய்தார் ரமேஷ். இதையடுத்து, ’ரமேஷ் பெற்ற கடன்களில், வங்கியிடம் பெற்ற கடனை ஒரு மாதத்திலும், மற்ற கடன்களை 6 மாதங்களிலும் அடைத்து விடுவதாக’ கூறியுள்ளார் முருகன்.
ஆகவே, முருகனிடம் ரமேஷ் கிரைய ஒப்பந்தம் போட்டுள்ளார். அந்த ஒப்பந்தப்படி, ’முழுத் தொகையை அளிக்க முடியாது, வங்கிக் கடனை மட்டுமே அடைக்க முடியும் என, முருகன் தரப்பினர், ரமேஷிடம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இச்சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என, ரமேஷை கடந்த ஆண்டு டிச.10-ம் தேதி அன்று சென்னை மாநகராட்சி மணலி மண்டல குழு அலுவலகத்துக்கு அழைத்துள்ளார் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம். இதையடுத்து, அங்கு சென்ற ரமேஷ் மீது ஏ.வி.ஆறுமுகம் மற்றும் முனுசாமி, திருநாவுக்கரசு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால், திருவொற்றியூர் உரிமையியல் நீதிமன்றத்தில் ரமேஷின் மனைவி வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த திருவொற்றியூர் உரிமையியல் நீதிமன்றம், ரமேஷின் புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, சமீபத்தில் உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் அடிப்படையில், ஏ.வி.ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேர் மீது, தாக்குதல் நடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியது தொடர்பாக 3 சட்டப் பிரிவுகளின் கீழ், மணலி போலீஸார் கடந்த 17-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.