சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய மேலாளர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு வெளிநாட்டிலிருந்து வந்த இ-மெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, விமான நிலைய இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவசரகால பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
விமானங்கள் தாமதம்: பாதுகாப்புப் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் இணைந்து விமான நிலையத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் விமானங்கள், விமானங்கள் நிறுத்தும் இடங்கள், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடங்கள், பார்சல்கள் விமானங்களில் ஏற்றப்படும் இடங்கள், கார் பார்க்கிங் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.
பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் கூடுதலாகவும், பயணிகள் விமானங்களில் ஏறும் இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வழக்கமாக வரும் புரளி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனால், நேற்று ஹாங்காங், பிராங்க் பார்ட், குவைத், துபாய், சார்ஜா, தோகா, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர், லண்டன் உள்ளிட்ட விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சென்னை விமான நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.