புதுச்சேரி: புதுச்சேரியில் பத்தர் கடை உரிமையாளரிடம் தங்க கட்டிகளுக்கு பதிலாக செப்பு கட்டிகளை கொடுத்து ரூ.72 லட்சம் மதிப்புள்ள நகைகளை மோசடி செய்து எடுத்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி பாரதி வீதியில் பத்தர் கடை நடத்தி வருபவர் தீபக் தாஸ்(50). இவரது கடைக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வந்த சந்திப் ஜனா என்ற நபர், தான் சேலத்தை சேர்ந்தவர் என்றும், அங்கு நகை கடை நடத்தி வருவதாகவும் கூறி அறிமுகம் செய்து கொண்ட அவர் தன்னிடம் 60 கிராம் தங்க கட்டி உள்ளது. அதனை பெற்றுக்கொண்டு தங்க நகைகளை தரும்படி கேட்டுள்ளார்.
தீபக் தாஸூம் தங்க கட்டியை பெற்றுக்கொண்டு, நகையை கொடுத்துள்ளார். இதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் தீபக் தாஸ் கடைக்கு வந்த, சந்திப் ஜனா 20 கிராம் தங்க கட்டியை கொடுத்து நகையை வாங்கி சென்றார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சந்திப் ஜனா, தீபக் தாஸை தொடர்பு கொண்டு 1.80 கிலோ தங்க கட்டி உள்ளதாகவும், இதற்கு தங்க நகை வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது தீபக் தங்க கட்டிகளை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
அதன்படி நேற்று இரவு புதுச்சேரிக்கு வந்த சந்திப் ஜனா பாரதி வீதியில் உள்ள தீபக் கடைக்கு சென்று பையில் வைத்திருந்த இரண்டு தங்க கட்டிகளை எடுத்து தீபக் தாஸிடம் கொடுத்துள்ளார். இதனை வாங்கி கொண்ட தீபக், இதற்கு பதிலாக 880 கிராம் தங்க நகைகளை சந்திப் ஜனாவிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கி கொண்டு சந்திப் ஜனா உடனே கடையிலிருந்து புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து தீபக் தாஸ் தங்க கட்டிகளை கடையின் கீழ் தளத்தில் சென்று ஆய்வுசெய்தபோது, அது வெறும் செம்பு கட்டி என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தீபக் தாஸ் உடனடியாக கடையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது சந்திப் ஜனா அங்கு இல்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை தீபக் தாஸ் உணர்ந்தார். ஏமாற்றப்பட்ட நகையின் மதிப்பு ரூ.72 லட்சமாகும்.
உடனே இது குறித்து தீபக் தாஸ் பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சந்திப் ஜனாவை கைது செய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.