க்ரைம்

சென்னையில் ஆயுதப்படை எஸ்ஐ மீது பயங்கர தாக்குதல்

செய்திப்பிரிவு

எழும்பூரில் ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளரை இருவர் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவல் உதவி ஆய்வாளராக பணிப்புரிந்து வருபவர் ராஜாராமன்(54). இவர் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன் தினம் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் ராஜாராமன் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

அவருடன் ராக்கி, ஐயப்பன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வீடியோ கேம் விளையாடி விட்டு, வீட்டுக்கு புறப்பட்ட போது, ராஜாராமனிடம், ராக்கி, ஐயப்பன் தகராறில் ஈடுபட்டு, அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ராஜா ராமனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக, ராஜாராமன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT