சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் தாக்கிய இடங்களுக்கு சாட்சிகளை அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதுரை ஆத்திகுளத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் அஜித்குமார் தம்பி நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் காவலாளிகள் வினோத்குமார், பிரவீன்குமார், கோயில் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக்வேல், தனிப்படை வாகன ஓட்டுநரும், காவலருமான ராமச்சந்திரன் ஆகியோரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று திருப்புவனம் காவல் நிலையத்துக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், தனிப்படை வாகன ஓட்டுநர் ராமச்சந்திரனிடம் விசாரித்தனர். தொடர்ந்து, ராமச்சந்திரன், நவீன்குமார், அருண்குமார், வினோத்குமார், பிரவீன்குமார் ஆகியோரை காரில் அழைத்துச் சென்றனர். பின்னர், அங்காடிமங்கலம் செல்லும் வழியில் உள்ள மீன், காய்கறி கடை வியாபாரிகளிடம் விசாரித்தனர். மடப்புரம் விலக்கில் கோயில் தோரணவாயிலுக்கு ஆட்டோ ஓட்டுநர் அருண்குமாரை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
தொடர்ந்து, தட்டான்குளம் காலியிடம், தவளைக்குளம் கண்மாய் செல்லும் வழியில் உள்ள புளியமரத்தடியிலும் சாட்சிகளிடம் விசாரித்தனர். நான்கு வழிச் சாலையில் இருந்து நரிக்குடி சாலை சந்திப்பில் உள்ள பேக்கரிக்கு அடிக்கடி தனிப்பிரிவு காவலர்கள் வந்து சென்றதாக கூறப்பட்ட நிலையில், அங்கும் விசாரித்தனர்.
நம்பர் பிளேட் பறிமுதல்: அஜித்குமாரை போலீஸார் தாக்கிய இடமான மடப்புரம் கோயில் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் தனிப்படை வாகன ஓட்டுநர் ராமச்சந்திரனிடம் பல மணி நேரம் விசாரித்தனர். மேலும், அங்கு அஜித்குமாரின் காலணி, சுவரில் காய்ந்திருந்த அஜித்குமாரின் ரத்தத் துளிகள், கீழே காய்ந்திருந்த சிறுநீர், மலம் ஆகியவற்றை சேகரித்தனர்.
அத்துடன், போலீஸார் பயன்படுத்தியதாக கூறப்படும் கம்பு, பிளாஸ்டிக் பைப்களையும் ஆய்வு செய்தனர். அதேபோல, போலீஸார் பயன்படுத்திய அரசு வாகனத்தில் இருந்த, சென்னை பதிவெண் இடம்பெற்றிருந்த நம்பர் பிளேட்டையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.