கோவை: கோவையில் ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத் துறை பெண் உதவி ஆணையர் கைது செய்யப்பட்டார்.
சூலூர் அருகேயுள்ள பாப்பம்பட்டியில் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு ஆண்டு வருமானம் ரூ.40 லட்சமாக இருப்பதாலும், கோயில் வருவாய் மற்றும் நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மை இல்லாததாலும், கோயிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருமாறு, கோயில் நிர்வாகிகளில் ஒருவரான சுரேஷ்குமார்(52) உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத் துறைக்கு உத்தர விட்டது. இதையடுத்து புகார்தாரர் சுரேஷ்குமார், கோவையில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்துக்கு சென்று, உதவி ஆணையர் இந்திராவிடம்(54) பலமுறை மனு அளித்தார்.
கோயிலை கையகப்படுத்த... கோயிலை அறநிலையத் துறையின் கீழ் கையகப்படுத்த ரூ.3 லட்சம் லஞ்சம் தருமாறு உதவி ஆணையர் இந்திரா கேட்டுள்ளார். தொடர் பேரத்துக்குப் பிறகு ரூ.2 லட்சமாவது தர வேண்டுமென உதவி ஆணையர் வலியுறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புபோலீஸாரிடம் புகார் அளித்தார்.
போலீஸார் ஏற்பாட்டின்படி, ரசாயனம் தடவிய ரூ.1.50 லட்சத்தை நேற்று முன்தினம் இரவு பாரதியார் சாலையில் உள்ள ஒரு கடை முன்பு உதவி ஆணையரிடம் சுரேஷ்குமார் கொடுத்துள்ளார். அப்போது, ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான போலீஸார் உதவி ஆணையர் இந்திராவைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.