க்ரைம்

கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவருக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள்

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில் 16 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில் மூவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நால்வருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இச்சிறுமி, தனது ஆண் நண்பருடன் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு நகருக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது, கருப்பராயன் கோயில் அருகே வந்த 6 பேர் இவர்களை மறித்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு சிறுமியை கடத்திச் சென்று மேற்கண்ட 7 பேரும் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமி தரப்பில் ஆர்.எஸ்.புரம் மகளிர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையிலான போலீஸார் போக்சோ, கடத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், காயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

தொடர்ந்து, கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30), வடவள்ளியைச் சேர்ந்த கார்த்தி (25), மணிகண்டன் என்ற ஆட்டோ மணிகண்டன் (30), சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ராகுல் (21), பிரகாஷ் (22), வடவள்ளியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி (30), சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவுற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் மூன்று குற்றவாளிகளான மணிகண்டன், கார்த்தி, ஆட்டோ மணிகண்டன் ஆகிய மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், 4-வது முதல் 7-வது வரையிலான குற்றவாளிகள் ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT