சென்னை: நுங்கம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே தலைமை பொறியாளர் வீட்டில் ரூ.1 கோடி திருடப்பட்ட சம்பவம் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆயிரம் விளக்கு வேலஸ்கார்டன் 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் வெங்கடாச்சலம் (63). ஓய்வு பெற்ற ரயில்வே தலைமை பொறியாளரான இவர், மனைவி பார்வதி, மகள் அபிராமி (27), அவரது கணவர் ஹரி (32), ஹரியின் தந்தை சக்திவேல் (70), ஹரியின் தாயார் ராஜாத்தி (65) ஆகிய 6 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
வெங்கடாச்சலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேளச்சேரியில் உள்ள அவரது நிலத்தை விற்பனை செய்தார். அதன் மூலம் கிடைத்த பணம், ஓய்வுப் பெற்ற போது கிடைத்த பணம் மற்றும் சிறுக சிறுக சேமித்த பணம், அவரது நண்பர் ஒருவர் கொடுத்த ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் 1 சவரன் தங்க வளையல் ஆகியவற்றை மகளின் படுக்கை அறையில் உள்ள சிலாப்பில் ஒரு சூட்கேசில் கடந்த ஏப்ரல் மாதம் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி பணம் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த வெங்கடாச்சலம் சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில், பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், இது குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து நடத்தி வருகின்றனர்.
வெங்கடாச்சலம் வீட்டில் ராஜேஸ்வரி என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. அவர் இந்த பணத்தை திருடினாரா? அல்லது வீட்டுக்கு வந்த உறவினர்கள் அல்லது கொள்ளையர்கள் யாரேனும் கைவரிசை காட்டி தப்பினார்களா? என்று பல்வேறு கோணங்களில் சூளைமேடு குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.