கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை 5 தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, ஆரம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதி (சனிக்கிழமை) வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி, மதியமே பள்ளி முடிந்ததால், ஆரம்பாக்கத்தில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக, ரயில் நிலையத்தை கடந்து சென்றுள்ளார்.
அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், சிறுமியை மாந்தோப்பு பகுதிக்கு தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பி உள்ளார். இதையடுத்து அழுதவாறு பாட்டி வீட்டுக்கு வந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து, பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, சிறுமி கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு, அவர், சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடம் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், சிறுமியை வடமாநில இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து செல்வது தெரிய வந்துள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய 3 காவல் உட்கோட்டங்களின் டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 5 தனிப்படை போலீஸார் ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தலைவர்கள் கண்டனம்: இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் பத்து வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் இருந்தும் இதுவரை குற்றவாளியைக் கைது செய்யாத காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: குற்றம் நடந்து ஐந்து நாட்கள் கடந்தும், இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்: புகார் வழங்கி ஐந்து நாட்கள் கடந்தும் குற்றவாளியைக் கைது செய்ய முடியாதது திமுக அரசின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.