திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான 420 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த 2 பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவற்றில் 420 இந்திய நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்தது. இவ்வகை ஆமைகள் மலேசியாவில் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனையாவதால், கடத்தப்பட இருந்த ஆமைகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆமைகளை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், அவற்றை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், அவற்றைக் கடத்த முயன்ற 2 பேரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “கடத்தல்காரர்களால் ரூ.5 ஆயிரத்துக்கு வாங்கப்படும் இந்த ஆமைகள், வெளிநாடுகளுக்கு அதிகளவில் கடத்தப்படுகின்றன.
குறைந்தபட்சம் மலேசியாவில் ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக அமெரிக்காவில் ரூ.1 லட்சத்துக்கும் விற்கின்றனர். இவற்றை வளர்ப்பது, விற்பனை செய்வது, கடத்துவது ஆகியவை வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம்’’ என்றனர்.