திருவாரூர்: திருவாரூர் அருகேயுள்ள காரியாங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 11-ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த குடிநீர் பைப்புகளை உடைத்தெறிந்ததுடன், சமையலறையில் இருந்த பாத்திரங்கள், பொருட்களை சேதப்படுத்தினர். பின்னர், அங்குள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்துவிட்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீஸார் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளைத் தேடி வந்தனர். தொடர் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த வெல்டிங் கடை உரிமையாளர் விஜயராஜ்(36), உதவியாளர் செந்தில்(38), பெயின்டர் காளிதாஸ்(25) ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தது, அரசுக்கு சொந்தமான பொருட்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் நேற்று கைது செய்தனர். பின்னர், மூவரையும் திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் ஜெயந்தி, உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போலீஸாருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டு தெரிவித்தார்.