சென்னை: கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்ட தீவிரவாதி அபுபக்கர் சித்திக் வெடிகுண்டுகள் தயாரிக்க பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. நாகை மாவட்டம், நாகூரைச் சேர்ந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக் கோவை தொடர் குண்டுவெடிப்பு, இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொலை உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், ‘ஆபரேஷன் அறம்’ என்னும் சிறப்பு நடவடிக்கை மூலம் அபுபக்கர் சித்திக்கை ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம், கடப்பா அருகே பதுங்கி இருந்தபோது தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதேபோல் மற்றொரு தீவிரவாதியான முகமது அலி என்ற ஷேக் மன்சூரையும் கைது செய்தனர். இவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு கடந்த 1-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தமிழக போலீஸார் கொடுத்த தகவலின்பேரில் அபுபக்கர் சித்திக் பதுங்கி இருந்த வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் ஏராளமான மின்னணு பொருட்களை ஆந்திர போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், கைதான இருவரையும் தமிழக போலீஸார் 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் விசாரணை முடிந்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீவிரவாதி அபுபக்கர் சித்திக் வெடிகுண்டுகள் செய்வதில் கைதேர்ந்தவர். இதற்காக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றுள்ளார். மேலும், நாச வேலை திட்டம் தீட்டுதல், தீவிரவாதிகளுக்கு நிதிஉதவி, தங்க இடம் ஏற்பாடு செய்தல் உட்பட பல்வேறு வேலைகளையும் திரைமறைவில் செய்துள்ளார்.
தொடக்கத்தில் அபுபக்கர் சித்திக் துபாய் தப்பி உள்ளார். அவரை கைது செய்ய தமிழக போலீஸார் அங்கு சென்றபோது அங்கும் அவர் தலைமறைவானார். பிறகு தமிழகம் திரும்பியவர், அதன் பிறகு ஆந்திராவில் பதுங்கி இருந்துள்ளார். வேலூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கு அபுபக்கர் சித்திக்தான் குருநாதர்.
கடந்த 2011-ம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரையின் போது மதுரையில் பாலத்தின்கீழ் வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் அபுபக்கர் சித்திக்கை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். கரோனா பேரிடரின்போது அபுபக்கர் சித்திக்கும் முகமது அலியும் ஹரியானா சென்று அங்கிருந்து துப்பாக்கிகளை வாங்கி வந்து பதுக்கி வைத்துள்ளனர். அவற்றை பறிமுதல் செய்வதற்காகவே முகமது அலியை மட்டும் ஆந்திர போலீஸார் அழைத்து சென்றுள்ளனர்.