சென்னை: காதல் திருமணத்தை கொண்டாடும் வகையில் ஓட்டலில் நடந்த கஞ்சா விருந்து தொடர்பாக நடிகர், வழக்கறிஞர்உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபலமான ஓட்டலில் கஞ்சா விருந்து நடப்பதாக பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்குள் போலீஸார் திடீரென நுழைந்து அறைகளைப் பார்வையிட்டனர். அப்போது ஓர் அறையில் இளைஞர்கள் கும்பலாக ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு நடனமும் ஆடிக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா போதையில் நடனமாடியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சென்னை சூளை ஜெகதீஸ்வர்(34), கொளத்தூர் சந்தோஷ்(27), அம்பத்தூர் தீபக்(27), காமேஷ்(25), புழல் சூரப்பட்டு அக்சய் ராஜீ(21), திருவள்ளூர் ரோகித்(21), கிருஷ்ணபரிக்(20), ஜிலான் (28), சரத்குமார்(32), பூந்தமல்லி மதன்குமார்(29) ஆகிய 10 பேரையும் போலீஸார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்களிடமிருந்து கஞ்சா, உயர் ரக கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜெகதீஸ்வர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார். இதைக் கொண்டாடும் வகையில் அவர் நண்பர்களுக்கு ஓட்டலில் விருந்து வைத்துள்ளார். அப்போது, கஞ்சா பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜெகதீஸ்வர் சினிமாவில் நடித்துள்ளார். அவருடன் கைதானவர்களில் சிலர் வழக்கறிஞர், யூடியூபர், பிசியோதெரபி உட்பட பல்வேறு பணிகளைச் செய்துவருவது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.