அமைச்சர் ராஜகண்ணப்பன் 
க்ரைம்

அமைச்சர் ராஜகண்ணப்பன் உதவியாளர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல்: இருவர் மீது வழக்கு

எஸ். முஹம்மது ராஃபி

ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் அமைச்சர் ராஜகண்ணப்பன் உதவியாளர் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகள் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானர்களை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி என்பதால் தொகுதி எம்.எல்.ஏவும், வனம் மற்றும் கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சரின் அலுவலக உதவியாளர் டோனி (35) என்பவர் சக உதவியாளர்களுடன் இணைந்து செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கடலாடி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மாயக்கிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன் உள்ளிட்டோர் மண்டபத்தில் திடிரென நுழைந்து தாக்கியுள்ளனர். இதில் அமைச்சரின் உதவியாளர் டோனிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் டோனி கொடுத்த புகாரின் பேரில் மண்டபத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு நடத்தியதில் டோனியை மாயகிருஷ்ணன் மற்றும் முரளிதரன் ஆகிய இருவரும் சேர்ந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்தது .

இதனையடுத்து மாயகிருஷ்ணன் மற்றும் முரளிதரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர். மேலும் டோனி மீனவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மீனவர் கூட்டமைப்பினர் ,தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகள் இருவரையும் போலீசார் கைது செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் சுவரொட்டிகளையும் ஒட்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT