செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த அம்மனூர் கிராமத்தில் வசித்து வருபவர் தர்மன். இவரது மகன் சுபாஷ் (27). சுபாஷின் பெரியப்பா அண்ணாமலை மகனாகிய சுரேந்தர் (32) நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த சுபாஷை எழுப்பி, ‘அவசர வேலை காரணமாக வெளியில் செல்ல வேண்டும் என்னை உன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்’ என்று கூறியுள்ளார்.
உடனே சுபாஷ் சுரேந்தரை அவருடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செய்யூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த சுரேந்தர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாஷின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்பு சுரேந்தர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த செய்யூர் காவல்துறையினர் சுபாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த சுரேந்தரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “கொலை செய்யப்பட்ட சுபாஷ், கொலையாளி சுரேந்தர் இருவரும் உறவினர்கள். இருவரும் மின்வாரிய அலுவலத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தனர். சுரேந்தருக்கு அடிக்கடி சாமி ஆடுவது வழக்கம். அப்படி சாமி வரும்போது சுபாஷ் தான் சமாதானம் செய்வார். சாமி ஆடும்போது நரபலி வேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் தம்பியை அழைத்து சென்று அண்ணன் நரபலி கொடுத்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.