ஆந்திராவில் கொலை செய்து இளைஞரின் உடலை சென்னை கூவத்தில் வீசிய ஜனசேனா கட்சி நிர்வாகிகள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஏழுகிணறு எம்.எஸ். நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பின்புறத்தில் கூவம் ஆற்றில் கடந்த 8-ம் தேதி உடலில் காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. உடலைக் கைப்பற்றி ஏழு கிணறு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்த நபர், திருப்பதி ஸ்ரீகாளகஸ்தியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு (எ) ராயுடு (22) என்பதும், காரில் வந்த ஒரு கும்பல், அவரது உடலை கூவத்தில் வீசி சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து காரின் பதிவெண் வைத்து போலீஸார் துப்பு துலக்கியதில், காரில் வந்து சடலத்தை வீசி சென்றது, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா கட்சியின் ஐடி விங் நிர்வாகி ஸ்ரீகாளஹஸ்தியைச் சேர்ந்த சிவக்குமார் (36), ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி பெண் பொறுப்பாளர் வினுதா கோட்டா (31), அவரது கணவர் சந்திரபாபு (35), உதவியாளர் கோபி (24), கார் ஓட்டுநர் ரேணிகுண்டாவைச் சேர்ந்த ஷேக் தாசர் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் திருத்தணியில் கைது செய்த போலீஸார் நேற்று முன்தினம் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சந்திரபாபு, வினுதா ஆகியோர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸார் கூறியதாவது: ராயுடு கடந்த 2019-ம் ஆண்டு முதல் வினுதா கோட்டா வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வினுதாவின் படுக்கை அறையில், அவர் உடை மாற்றும்போது கட்டிலுக்கு அடியில் ராயுடுவின் செல்போனை வினுதா கண்டெடுத்துள்ளார். அப்போது, செல்போனில் வீடியோ பதிவாகிக் கொண்டிருந்தது. இதுகுறித்து ராயுடுவிடம் சந்திர பாபு விசாரித்துள்ளார்.
அப்போது, ஜனசேனா கட்சியின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ பஜாலா சுதீர் ரெட்டிக்கு, ஜனசேனா கட்சியின் ரகசியங்களையும், செயல்பாடுகளையும் அவர்களிடம் தெரிவித்து பணம் பெற்று வந்ததாகவும், அவரது தூண்டுதலின் பேரில் வினுதாவின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாகவும் ராயுடு தெரிவித்துள்ளார். இதையடுத்து ராயுடுவை எச்சரித்து அவரது பாட்டியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அண்மையில் ராயுடுவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து, அறையில் அடைத்து வைத்து, கட்சி ரகசியங்களை எதிர் அணியினருக்கு கொடுத்தது குறித்து சந்திரபாபு, வினுதாவும் ராயுடுவை அடித்து விசாரித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி கழிவறையில் ராயுடு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், பயத்தில் அவரது உடலை காரில் எடுத்து வந்து சென்னையில் கூவத்தில் வீசிச் சென்றதாகவும் வினுதாவும், அவரது கணவரும் தெரிவித்தனர். மேலும், தாங்கள் கொலை செய்யவில்லை, ராயுடு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக ஆந்திரா போலீஸாருடன் கலந்தாலோசித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘இரு கட்சியினருக்கு இடையேயான பிரச்சினையில் ராயுடு கொலை செய்யப்பட்டதாகவும், கொலை செய்த ஜனசேனா கட்சி நிர்வாகிகளைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும்’’ தெரிவித்தார்.