தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவேங்கட உடையான்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்தவர்கள் செந்தில்மகன் பாலமுருகன்(10), கனகராஜ் மகன் மாதவன்(10), ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த்(8). அதே ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பாலமுருகன், மாதவன் ஆகியோர் 5-ம் வகுப்பும், ஜஸ்வந்த் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற இவர்கள் இரவாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் அவர்களை தேடினர்.
அப்போது, மருதக்குடி பிள்ளையார் கோயில் குளத்தின் கரையில் 3 சிறுவர்களின் ஆடைகள், புத்தகப்பை மற்றும் செருப்புகள் கிடந்தன. கிராம மக்கள் குளத்தில் இறங்கி தேடியபோது, பாலமுருகன், மாதவன், ஜஸ்வந்த் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களது சடலங்களை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துஉள்ளார்.