க்ரைம்

உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: கோவையில் திமுக நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில், கோவை வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை வரவேற்று அதிமுகவினர், திமுக பேனருக்கு முன்பாக பதாகை வைத்துள்ளனர். இதனால் அதிமுகவின் பேனரை அங்கிருந்து திமுகவினர் அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கடந்த 10-ம் தேதி தகராறு ஏற்பட்டது. திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு பணியில் இருந்து உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அஜய் சர்மாவுக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோவை மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், உதவி ஆய்வாளரை நோக்கி, கையை நீட்டி கடுமையான வார்த்தையால் பேசி மிரட்டல் விடுத்தார். பொதுமக்கள் சிலர் இந்த நிகழ்வை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, உதவி ஆய்வாளர் அஜய்சர்மா உக்கடம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அதிகாரிகளை தடுத்தல், தகாத வார்த்தையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் கோட்டை அப்பாஸ், பகுதி செயலாளர் பதுருதீன், வார்டு செயலாளர் அப்பாஸ், இளைஞர் அணி நிர்வாகி மசூது உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT