திருப்பூர்: அவிநாசியில் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தியின் ஜாமீன் மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், மாமியார் சித்ராதேவி ஜாமீன் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரிதன்யாவின் குடும்பத்தினர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சித்ராதேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி குணசேகரன் தள்ளுபடி செய்தார்.
இதுகுறித்து ரிதன்யாவின் வழக்கறிஞர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சித்ரா தேவியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு கேட்டனர். ஆனால், அவர் மிகவும் தாமதமாக கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்” என்றார்.