திருச்சி: திருச்சி தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள செங்கரையான்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அபிஷேக்(18).
திருச்சி புத்தூர் வயலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி, பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே, விடுதிக் காப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஜூலை 7-ம் தேதி அபிஷேக்கின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு, அபிஷேக் சரியாக கல்லூரிக்குச் செல்வதில்லை என புகார் தெரிவித்து, கல்லூரிக்கு வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, அபிஷேக்கின் தந்தை வெங்கடேசன் நேற்று முன்தினம் காலை கல்லூரி விடுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, விடுதி அறையில் அபிஷேக் இல்லாததால், இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் வெங்கடேசன் கேட்டுள்ளார். அதற்கு அவர், அபிஷேக் வெளியே சென்றிருப்பார் எனவும், காத்திருக்குமாறும் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், மாலை 4 மணிஆகியும் அபிஷேக் விடுதிக்குத் திரும்பவில்லை.
இதையடுத்து, விடுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரவுக்குப் பிறகு அபிஷேக் விடுதியில் இருந்து வெளியேறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, விடுதி அறைகளில் தேடியபோது 3-வது மாடியில் உள்ள ஒரு குளியலறை உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து பார்த்தபோது, அபிஷேக் அங்கு தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். தகவலறிந்து உறையூர் போலீஸார் சென்று அபிஷேக் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அபிஷேக்கின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவர் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். அதேவேளையில், அபிஷேக் பெற்றோரின் புகார் காரணமாக அவரது உடல் நேற்று மாலை வரைபிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.
மற்றொரு மாணவர் தற்கொலை; வெடி வெடித்து இன்னொரு மாணவர் மரணம்: திருச்சி தென்னூர் சின்னசாமி நகரைச் சேர்ந்தவர் தனவீரன் மகன் பிரவீன்(20). புத்தூர் பகுதியில் உள்ள அதே கல்லூரியில் படித்து வந்தார். இவர், ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அதை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த பிரவீன், ஜூன் 30-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், ஜூலை 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக பிரவீன் உடலை கொண்டு சென்றபோது, சக மாணவர்கள் சாலையில் வெடி வெடித்தவாறு சென்றுள்ளனர். அப்போது, அதே கல்லூரியில் படித்து வந்த பாலக்கரையைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் டேனியல் வின்சென்ட்(19) கையில் வைத்திருந்த நாட்டுவெடி திடீரென வெடித்துச் சிதறியது.
இதில், உடலில் பலத்த காயமடைந்த டேனியல் வின்சென்ட், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். கல்லூரி மாணவர்கள் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால், கல்லூரிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.