தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கார், சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் குமார்(57). இவர், மனைவி ஜெயா(55), மகள் துர்கா(32), மருமகன் ஸ்டாலின்(36), பேத்தி இதழினி தூரிகா(3), மற்றொரு மகள் மோனிஷா(30) ஆகியோருடன் கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் காரில் புறப்பட்டார். காரை ஸ்டாலின் ஓட்டினார்.
கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்களில் அனைவரும் நேற்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குப் புறப்பட்டனர். தஞ்சாவூரை அடுத்த குருங்களூர் பாலம் அருகே வந்தபோது, எதிரே விதிமுறையை மீறி எதிர்திசையில் நாற்றுகளை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வேனும், காரும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஜெயா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்ற அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழியிலேயே துர்கா, குமார், சிறுமி இதழினி தூரிகா ஆகியோர் உயிரிழந்தனர். மோனிஷா, ஸ்டாலின் மற்றும் சரக்கு வேன் ஓட்டுநர் உதாரமங்கலத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.