வேலூரில் சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் கண்ணாடிகளை பொதுமக்கள் அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையின் புதிய கிளை ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் சிஎம்சி கிளையில் இருந்து ரத்தினகிரி சிஎம்சி கிளைக்கு நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சுலபமாக வந்து செல்வதற்காக தனியார் பேருந்து நிறுவனம் ஒன்றுடன் சிஎம்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளனர். மொத்தம் 36 பேருந்துகள் வேலூர் மற்றும் ரத்தினகிரி சிஎம்சி கிளைகளுக்கு இடையில் இயக்கப்பட்டு வருகின்றன
இந்நிலையில், ரத்தினகிரி சிஎம்சி கிளையில் இருந்து நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து நேற்று மாலை காகிதப்பட்டறை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் (25) என்ற இளைஞர் மீது பேருந்து மோதியதில் அவர் சம்பவஇடத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார். விபத்தை அடுத்து அங்கு திரண்ட அப்பகுதி மக்கள், பேருந்தின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும், பேருந்தையும் சிறைபிடித்தனர். இதனால், பேருந்தில் இருந்தவர்கள் அச்சத்துடன் கீழே இறங்கி சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த வடக்கு காவல் துறையினர் மற்றும் சிஎம்சி நிர்வாகத்தினர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு விபத்தில் இறந்த பெருமாளின் உடலை மீட்டதுடன் சிறைபிடிக்கப்பட்ட பேருந்தையும் விடுவித்தனர். சிறிது நேரத்தில் பெருமாளின் உறவினர்கள் சிலர் சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, அங்கிருந்த அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஆற்காடு சாலையில் ஒரு வழிப்பாதை மட்டும் இருந்து வரும் நிலையில் சிஎம்சி பேருந்து மட்டும் இருவழி பாதையாக பயன்படுத்துகின்றனர். எனவே, ராணிப்பேட்டையில் இருந்து வேலூர் வரும்போது காகிதப்பட்டறை வழியாக செல்ல அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.