மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே காரைக்கால் மாவட்ட தவாக நிர்வாகி மணிமாறன் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் உட்பட 4 பேர் காவல் நிலையத்தில் நேற்று சரண் அடைந்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக பதவி வகித்த, திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் தேவமணிக்கும், அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மகன் மணி மாறனுக்கும் (34) இடையே நிலவி வந்த இடப்பிரச்சினையில், 2021, அக்.22-ம் தேதி தேவமணி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட மணிமாறன், ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வந்த மணிமாறன், ஜூன் 4-ம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, செம்பனார்கோவில் அருகே காளகஸ்தி நாதபுரம் பகுதியில் தனியார் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது 2 கார்களில் வந்தவர்கள், மணிமாறன் சென்ற காரை மறித்து நிறுத்தி, அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
இது குறித்து செம்பனார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் தேவமணியின் மகனும், காரைக்கால் மாவட்ட பாமக செயலாளருமான திருநள்ளாறு பிரதான சாலையைச் சேர்ந்த பிரபாகரன் (29), அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் குணசேகரன் (23), வீரமணி (45), ஓட்டுநர் முருகன் (23) ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் கரிகால சோழன் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று சரணடைந்த 4 பேரையும் செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சரண் அடைந்தவர்களிடம் இருந்து ஒரு காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.