திருப்பூரில் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் அத்துமீறிய டிக்கெட் பரிசோதகரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த 34 வயது பெண், கடந்த 3-ம் தேதி சென்னையில் இருந்து மங்களூரு வரை செல்லும் ‘வெஸ்ட் கோஸ்ட்’ எக்ஸ்பிரஸ் ரயிலில், முறப்பூரில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் எடுத்துக் கொண்டு காத்திருந்தார். அப்போது, ரயிலில் ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக ரயில் கிளம்பியது. உடனே, குளிரூட்டப்பட்ட பெட்டியில் ஏறினார். அங்கு டிக்கெட் பரிசோதகர் வந்து பயணிகளிடம் டிக்கெட்டை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண், திருப்பூரில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார். திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்திறங்கிய பெண், ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக வேலூர் புளியமங்கலத்தை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் பாரதி (50) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.